2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நடக்கும்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நடக்கும்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்று (31) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கமைய மாணவர்கள் அந்தந்த திகதிகளுக்கு ஏற்ப தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு காரணங்களினால் பரீட்சை காலப்பகுதிகள் மாற்றமடைந்ததால் கடந்த காலங்களில் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அதன் காரணமாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறவுள்ளதுடன், தற்போது முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (01) முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதியும் மற்றும் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 08ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.