8 வருட சேவை நிறைவடைந்தும் இடமாற்றம் மறுப்பு- நீதி கோரி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

8 வருட சேவை நிறைவடைந்தும் இடமாற்றம் மறுப்பு- நீதி கோரி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களது இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்கள் இதுவரை ஒருசிலரது சுயனலங்களுக்காக தடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால், இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது,

"8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வஞ்சிப்பதேன்?"
"வெளிமாவட்ட ஆசிரியர்கள் இடமாற்ற உரிமை இழந்தவர்களா?" "வதைக்காதே வதைக்காதே நல்நாற்றுக்களை நாலிரண்டு ஆண்டுகளாய் நாட்டியோரை waiting pending எண்டு காலம் தாழ்த்தி"
"நியமன கடிதத்தின் நியமன காலம் முடிந்த எமக்கு மேலதிக தண்டனை எதற்கு?"
"யாரும் போக மாட்டோமென வேறு திசை பார்க்க நாமிருக்கோம் என வந்த எமை நீடு காலம் நீட்டி வாட்டி வதைப்பது தான் நீதியா?"
முதலான பல்வேறு கோசங்களுடன் பதாதைகளை தாங்கி போராடத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் பட்டியலிடப்பட்டுள்ள இடமாற்றங்கள் இதுவரை ஒருசிலரது சுயனலங்களுக்காக தடுக்கப்பட்டு வருகின்றது.

இது எமது உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதாக இருக்கின்றது. நாம் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கிணங்க எமது சேவைகளை சரியாக செய்து முடித்துள்ளோம். ஆனாலும் வழங்கப்பட்ட இடமாற்றம் இன்னும் எமக்கு கிடைக்காத நிலை இருக்கின்றது.

எமக்கு நீதி வேண்டும். அரசியலும் அதிகாரமும் எமது நியாயத்தை பறிக்கின்றது. எனவே துறைசார் அதிகாரிகள் சுயநலவாதிகளின் சதிக்கு இடம் கொடுக்காது எமது உணர்வுகளை மதித்து நீதியை தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.