ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்!
பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 6,000 மில்லியன் ரூபா என கடற்படை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (01) காலை குறித்த மீன்பிடிப் படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, படகிலிருந்த 298 உரப் பைகளில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்தார்.
குறித்த படகு இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகு எனவும், அதிலிருந்த 6 சந்தேகநபர்களும் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.