அமைச்சுகளின் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்க்க 5 அதிகாரிகள் நியமனம்!

அமைச்சுகளின் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்க்க 5 அதிகாரிகள் நியமனம்!

அமைச்சுகளின் எரிபொருள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவசியமான தலையீடுகளை மேற்கொள்வதற்காக, அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிக்க அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிக்கும் குழு தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு அமைச்சின் கீழும் உள்ள நிறுவனங்களில் எழும் எரிபொருள் சிக்கல்களைக் கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து தீர்வுகளை வழங்குவதில் இந்த அதிகாரிகள் தலையிடுவது அவர்களின் பொறுப்பு என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இது குறித்து ஆராயப்பட்டது.

கைத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வாகனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாக நேரிடும் என்றும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கைத்தொழில் துறை, சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மொத்த இறக்குமதியாளர்கள், சுற்றுலாத் துறை சேவை நிறுவனங்கள் அல்லது ஹோட்டல்கள் மற்றும் ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது குறித்தும் இக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

அதற்கமைய அந்த நிறுவனங்களால் முன்வைக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டு கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கும், அக்கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஊடாக எரிசக்தி அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட ஏனைய துறைகளுக்காக விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அந்தந்த துறைசார் அரச அதிகாரிகளின் பரிந்துரைக் கடிதங்களுக்குப் பதிலாக, QR குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதையும், பொருட்களின் விலை கடுமையாக உயர்வதைத் தடுப்பதையும் இலக்காகக் கொண்டு, எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாகவும் முறையான முகாமைத்துவத்துடனும் பேணுவது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.