அமெரிக்கா எதிர்பார்த்தது போல ஈரானை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது- ஈரானிய வெளியுறவு அமைச்சர்!
அமெரிக்கா எதிர்பார்த்தது போல ஈரானை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதியை விரும்புவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ள சந்தர்ப்பத்திலேயே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போதைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தவறினால், இதற்கு முன் எப்போதும் கண்டிராத வகையிலான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை ஈரான் நிராகரித்தால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்காக, 15 நிபந்தனைகள் அடங்கிய போர்நிறுத்த முன்மொழிவை அதிபர் ஜனாதிபதி நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இந்த முன்மொழிவுகளை நிராகரித்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி, அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். அ
மெரிக்கா மத்தியஸ்தர்கள் ஊடாகப் பல்வேறு செய்திகளை அனுப்பினாலும், ஈரானுக்குத் தேவையானது நிரந்தரமான தீர்வு மட்டுமே என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் தரப்பில் சேதங்களுக்கான இழப்பீடு உட்பட 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் நிலவுவது ஈரானின் போரோ அல்லது அமெரிக்காவின் போரோ அல்ல, மாறாக இஸ்ரேலின் தேவைக்காகவே அமெரிக்கா செயற்படுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா எதிர்பார்த்தது போல ஈரானை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என்றும், அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.