இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த மசாடோ காண்டா நேற்றிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வந்தடைந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா அவர்களை, நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

தனது விஜயம் குறித்து 'X' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மசாடோ காண்டா, இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான தருணத்தில் தான் இங்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், தொடர்பாடல்களை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளைத் திரட்டுவதன் மூலம் இலங்கையின் இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் இந்த முன்னுரிமை விடயங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.