குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பாரிய குற்றவாளிகள் நாட்டுக்கு!

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பாரிய குற்றவாளிகள் நாட்டுக்கு!

வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்றயதினம் (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

நாட்டிற்கு இன்று (30) அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்கவும் குறித்த நபர்களில் அடங்குகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர் கொலை, பாரிய கொள்ளை, துப்பாக்கி வைத்திருத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளப் பணப் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என கூறினார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.

சர்வதேச உறவுகள் காரணமாக, சிவப்பு அறிவித்தல் இன்றியும் சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிகிறது.

அவ்வாறு 13 சந்தேகநபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இரு சந்தேகநபர்களும் சிவப்பு அறிவித்தல் இன்றியே கொண்டு வரப்பட்டனர்.

தற்போது வரை 88 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.