"குஷ்" போதைப்பொருளை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முயன்ற இருவர் கைது!
நாட்டுக்குள் "குஷ்" போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'பசுமை வழி' ஊடாக இந்தப் போதைப்பொருளை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோது இன்று (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இந்தப் போதைப்பொருளைக் கொள்வனவு செய்த இவர்கள், பின்னர் இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்று அங்கிருந்து AI-3203 ரக விமானம் மூலம் இன்று அதிகாலை 5.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளில் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த 12 பெக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோ 476 கிராம் எடையுடைய "குஷ்" போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இதன் மொத்தப் பெறுமதி 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களும், போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.