மட்டக்களப்பில் அரங்கேறிய சம்பவம்- கொலையாளிகளின் பகீர் வாக்குமூலம்!

மட்டக்களப்பில் அரங்கேறிய சம்பவம்- கொலையாளிகளின் பகீர் வாக்குமூலம்!

மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த தவணைக் கட்டண அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 19 பவுண் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

முதற்கட்டமாக நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே நகையக உரிமையாளர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

முன்னதாக கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் யுவதி ஒருவர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல மர்மங்கள் வெளிக்கொணரப்பட்டன. சடலமும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பல குற்றச் செயல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 03 பிரதான சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 2 நகையக உரிமையாளர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.