மட்டக்களப்பில் அரங்கேறிய சம்பவம்- கடத்தல் கும்பலின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த முக்கிய ஆதாரம்!

மட்டக்களப்பில் அரங்கேறிய சம்பவம்- கடத்தல் கும்பலின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த முக்கிய ஆதாரம்!

மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கொலை கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் யுவதி ஒருவர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல மர்மங்கள் வெளிக்கொணரப்பட்டன. சடலமும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பல குற்றச் செயல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 03 பிரதான சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 2 நகையக உரிமையாளர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார்,நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகளை கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரை கைது செய்தனர்.

அவரது வீட்டின் நிலத்திலும் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்த மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவி போத்தல் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தநிலையில் மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.