மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்- சட்டத்தரணிகள் முன்நிலையாகக் கூடாது என வலியுறுத்தி போராட்டம்!
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவத்திற்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் கொக்கட்டிச்சோலை நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில், மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கரவண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே கிணற்றில் இன்னுமொரு பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவங்கள், அவற்றுடன் தொடர்புபட்ட கொலையின் பின்னணி கண்டறியப்பட்டு பின்னர், பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய 05 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 4 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது எனவும், சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், மாவட்டத்தில் இனி இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது,
'துணைபோகாதே துணைபோகாதே கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே,
'போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், நீதியைநிலைநாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்,
'கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே,
விரைவாக நீதியை வழங்கு'
முதலான வாசகங்களை ஏந்தியவாறு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியில் இருந்து பிரதேசசபை வரை பேரணியாக இடம்பெற்று பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.