மயங்கி விழுந்த பாடசாலை மாணவனுக்கு வைத்தியர் இல்லாமையால் சிகிச்சையளிக்காது விட்ட அவலம்!
இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்த நிலையில், இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில், வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் நேற்றையதினம் மயங்கி விழுந்துள்ளான்.
இந்தநிலையில் குறித்த மாணவனை அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அங்கு வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் எனவும் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவனின் நிலை கருதி தாதியர் ஒருவரை முதலுதவி செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கேட்ட நிலையில், மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தமக்கு பொறுப்பாயிடும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
மாணவனை அனுப்புவதற்கு ஆம்புலன்ஸ் வண்டி ஏதாவது ஒழுங்கு செய்து தாருங்கள் என கேட்ட நிலையில் அதுவும் தம்மிடம் இல்லை வேறு ஆம்புலன்ஸ் வண்டிகளும் இங்கு வராது என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மயக்கமடைந்த மாணவனை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.