நிலவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்!
நிலவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை நாசா (NASA) அமைப்பு வெளியிட்டுள்ளது.
நாசா தனது 'X' சமூக ஊடகக் கணக்கில் "அது நாம்தான்!" (That's us!) என்ற தலைப்புடன் உத்தியோகபூர்வமாக அந்தப் புகைப்படத்தை நேற்று (03) பகிர்ந்துள்ளது.
1972ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணிக்கும் ஒராயன் (Orion) விண்வெளி ஓடம், தனது பயணத்தின் முதல் நாளில் உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் காற்று மண்டலக் கட்டமைப்பு உள்ளிட்ட விண்கலத்தின் செயல்பாடுகளைப் பரிசோதிப்பதற்காக பூமியின் சுற்றுப்பாதையில் தங்கியிருந்தது.
எவ்வாறாயினும், விண்கலம் ஏவப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பிறகு அதன் கழிவறை அமைப்பில் சிக்கல் ஒன்று ஏற்பட்டிருந்தது.
கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் அந்தப் பிரச்சினையைச் சரிசெய்த விண்வெளி வீரர்கள், பின்னர் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கினர்.
நான்கு விண்வெளி வீரர்களும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விண்கலம் சீராகச் செயல்படுவதாகவும் நாசா அறிவித்துள்ளது.
விண்கலத்தில் பயணிக்கும் வீரர்கள் தமது முதல் நாள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக வீடியோ அழைப்பு மூலம் நாசாவுடன் தொடர்புகொண்டனர்.
இதன்படி, இன்னும் 4 நாட்களுக்குள் விண்கலம் நிலவுக்கு மிக அருகில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.