தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!

தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!

எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணத் திருத்தம் அவசியம் என தெரிவித்து சில தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையைத் திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்துள்ளதால், பேருந்து கட்டணத் திருத்தம் அவசியம் எனப் பேருந்து சங்கங்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தன.

நேற்றைய (22) தினமே பேருந்து கட்டணத் திருத்தத்தை வழங்குமாறு கோரியிருந்த போதிலும், அது நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்றைய தினம் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்ததாக அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டண சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கோரி இன்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், புதிய பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்படும் வரை சேவையில் ஈடுபடப் போவதில்லை எனப் பேருந்து சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

எரிபொருள் விலை உயர்வால் அதற்கான செலவீனம் அதிகரித்துள்ளதோடு, பழைய கட்டணத்தின் கீழ் பேருந்து பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட முடியாது எனவும் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.