உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாக பாகிஸ்தான்!
2025ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடாகக் காணப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
அங்குள்ள நுண்துகள்களின் செறிவு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த அளவை விட 13 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தரக் கண்காணிப்பு நிறுவனமான IQAir இந்த வாரம் வெளியிட்ட அதன் வருடாந்த அறிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்குக் குறைவாக சராசரி நுண்துகள் அளவைப் பேண முடிந்தவை வெறும் 13 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் காணப்பட்ட 7 நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
IQAir நிறுவனம் 143 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்களிலுள்ள 9,446 நகரங்களிலிருந்து தரவுகளைத் திரட்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, கண்காணிக்கப்பட்ட 143 நாடுகளில் 130 நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத் தரநிலையை எட்டுவதற்குத் தவறியுள்ளன.
இந்தப்பட்டியலில் இலங்கை 42 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் 2024ஆம் ஆண்டை காட்டிலும் 2025 இல் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளது
குறித்த பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், பங்களாதேஷ் இரண்டாம் இடத்திலும், தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 6ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.